
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு 17 வயது மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் நட்பாக இருந்துள்ளான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த மது பாட்டில்களை சிறுவன் தன்னுடைய வயிற்றுப் பகுதியில் சொருகி வைத்துள்ளான். இவர்கள் தொரூவளுர் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் ஒன்று சிறுவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியது.
அப்போது பைக்கில் இருந்து சிறுவர்கள் இருவரும் கீழே விழுந்த நிலையில் சிறுவன் வயிற்றில் சொருகி வைத்திருந்த மது பாட்டில்கள் உடைந்து கண்ணாடி குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் மாணவன் வலியால் துடி துடித்த நிலையில் மற்றொரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மது பாட்டில்கள் வயிற்றில் குத்திய மாணவன் செல்லும் வழியில் உயிரிழந்தான். மற்றொரு மாணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.