
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பலர் மீட்க பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அங்கு நிவாரண பணிக்காக உதவி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் விக்ரம், ஜோதிகா, சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராஷ்மிகா மந்தனா, ராம்சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் நிவாரண உதவி வழங்கிய நிலையில் தற்போது பிரபல நடிகர் தனுஷ் நிவாரண உதவிக்காக பணம் அனுப்பியுள்ளார். அதன்படி ரூ.25 லட்சத்தை நிவாரண பணிகளுக்காக அவர் கொடுத்துள்ளார். மேலும் இதேபோன்று செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷும் வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.