
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன், குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரும் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
05.03.2025 அன்று வெளியான அரசாணை எண் (4D) 14 படி, இந்த திட்டத்தில் தாமாகவே வீடு கட்டும் பயனாளிகளுக்கு (BLC வகை) அரசு மானியமாக ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். இதில் மத்திய அரசு 30% நிதி வழங்குகிறது. மேலும், தமிழக அரசு அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் வரை நிதியுதவி தருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளில் வசிக்கும் மக்களுக்கு 1000 புதிய வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் கடந்த 20 ஆண்டுகளில் வீடு கட்ட அரசு மானியம் பெறாதவராக இருக்க வேண்டும். சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடாது.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள், குடும்ப அட்டை, வருமான சான்றிதழ்,வங்கி கணக்கு புத்தகம், பட்டா அல்லது பத்திரம், 25 வருட வில்லங்க சான்றிதழ்,தந்தை/தாயின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்கள் அவசியம்.
இணைய வழியாக விண்ணப்பிக்க இங்கே சென்று பதிவு செய்யலாம்: https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/PMAY_SURVEY/EigiblityCheck.aspx
இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.