இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மாதந்தோறும் மருந்துகளின் தரத்தை பரிசோதித்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 50-க்கு மேற்பட்ட மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைக்கு உட்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பராசிட்டமால், பான் டி, விட்டமின் சி போன்ற பொதுவான மருந்துகள், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த மருந்துகள் உள்ளிட்டவை தரமற்றவையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளில் பல முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக ஆல்கம் லேபரட்டரிஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ், கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் தரக்கேடுகளுக்கு உள்ளாகியுள்ளன. தரத்துக்கு உட்படாத இந்த மருந்துகள், நோயாளிகளின் உடல்நலத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றின் பயன்பாட்டில் மிகுந்த கவனமுடனும், கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள், ஆகஸ்டு மாதத்தின் தரமற்ற மருந்துகளுக்கான விவரங்களை இன்னும் அனுப்பவில்லையென்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் இந்த சோதனைகள் இன்னும் முழுமையடையவில்லை. மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.