சென்னை மாவட்டம் புங்கம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவருக்கு தனது உறவினர் மூலம் ஜோதி(37) என்ற பெண் அறிமுகமானார். ஜோதி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையில் புதிதாக லேப் டெக்னீசியன், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஜோதி கூறியுள்ளார். இதனை நம்பி சதீஷ்குமார் தனது மனைவி உறவினர்கள் என 22 நபர்களிடமிருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஜோதியிடம் 10 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை வாங்கிக் கொண்ட ஜோதி இதுவரைக்கும் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.