
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் தன்னை பொறியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொருட்கள், போக்குவரத்து கட்டணம், ஆவண கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி முதியவரிடமிருந்து 11 லட்சத்து 15 ஆயிரத்து 720 ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கு டெல்லி திலக் நகரைச் சேர்ந்த நாராயணன் குமார்ஷா, தீபக் உள்ளிட்ட சிலர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2-ஆம் தேதி நாராயணன், தீபக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.