
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மருத்துவரான மீரா உசேன்(82), தனது செல்போனில் வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார்.
மறுமுனையில் பேசிய நபர் தன்னை மும்பை சிபிஐ போலீசாக அறிமுகப்படுத்தி, “உங்கள் பெயரில் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உடனடியாக ஆதார் மற்றும் பான் விவரங்களை அனுப்புங்கள்” எனக் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த நபர், “உங்களை கைது செய்ய வேண்டாமெனில் ₹2 கோடியை எங்கள் கணக்கில் செலுத்துங்கள்” எனப் பயமுறுத்தியுள்ளார். இதனால் பெரும் பதட்டமடைந்த அவர், தனது வங்கிக்கணக்கிலிருந்து ₹55 லட்சம் மற்றும் ₹64.20 லட்சம் என மொத்தம் ₹1.19 கோடியை இரண்டு தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் அவர்கள் அழைத்த போது சந்தேகம் வந்த மீரா உசேன், உடனடியாக திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் மோசடி கும்பலை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தனிப்பட்ட வங்கி விபரங்கள், ஆதார், பான், OTP, PIN போன்றவை யாருடனும் பகிரக்கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.