
சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டு, எச்சரிக்கை வழங்கியுள்ளனர்.
சமீப காலமாக, சில மர்ம நபர்கள் “₹7000 க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள் தானாகவே ரத்து செய்யப்படும்” என கூறி, தமிழக அரசின் பெயரில் போலியான ஒரு ஆப்பின் லிங்கை மக்கள் மொபைல்களுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த லிங்கில் கிளிக் செய்து, வாகன எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்கும்போது, பயனாளியின் மொபைல் எண், வங்கி விவரங்கள், OTP உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடப்பட்டு, கணக்கில் உள்ள தொகையை முழுமையாக பறிக்கின்றனர்.
இந்த மோசடியை சைபர் கிரைம் பிரிவினர் விரைந்து கண்டறிந்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரசு அல்லது போக்குவரத்து துறை எந்தவிதமான அபராத நிவாரண லிங்கையும் வெளியிடவில்லை என்றும், அவ்விதமான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும். எந்த அரசாங்கத்துறையும் உங்களிடம் OTP கேட்காது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த புதிய வகை சைபர் மோசடி அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சந்தேகங்களை தவிர்க்க, அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மற்றும் செயலிகளையே மட்டுமே பயன்படுத்தவும் என்று சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.