உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. நேற்று  தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நேரத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் 36 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அதன் பிறகு உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கண்ணீர் மல்க இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதோடு மன்னிப்பும் கேட்டார். இது தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நீதித்துறை ஆணையத்தை சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.