
கரீபிய தீவுகளில் இருக்கும் ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸ். இங்குள்ள cite solcil என்ற பகுதி ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்று. இங்கு பல்வேறு கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதில் வார்ப் ஜெர்மி என்ற கும்பலுக்கு மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவர் தலைவராக உள்ளார். அவரது மகன் சமீபத்தில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் மோனல் ஒரு தேவாலயத்திற்கு சென்று பாதிரியாரை சந்தித்துள்ளார். அப்போது மோனல் மகனுக்கு அந்த பகுதியில் வசிக்கும் சூனியக்காரர்கள் பில்லி சூனியம் வைத்துள்ளதாக பாதிரியார் கூறியுள்ளார்.
இதனை கேட்டு கோபமடைந்த மோனல் அந்த பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி ஆண்கள் பெண்கள் என 200 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த படுகொலைகளை ஹைதி அரசும் உறுதிப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் வோல்கர் டர்க் கும்பல் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தில் இது போன்ற வன்முறைகள் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக கூறினார். அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மோனல் தங்களது நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.