
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் லியோனார்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 2,400 சதுர அடி வீட்டுமனை வாங்கி அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த பிரதாப், பெரியசாமி ஆகிய இருவரும் போலியான ஆவணங்களை தயாரித்து பொது அதிகாரம் பெற்று லியோனார்டுக்கு சொந்தமான 45 லட்ச ரூபாய் நிலத்தை அஞ்சலிதேவி என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து லியோனார்டு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரதாப் மற்றும் பெரியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.