கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி வழங்கப்பட்டு வருவதோடு, நோட்டா அமைப்பின் மூலமாகவும் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிபராக டிரம்ப் பதவியேற்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா சீனாவிற்கு சென்றார். அங்கு சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது 2 முக்கிய விஷயங்களை மட்டுமே முன் வைத்ததாக குலேபா கூறினார். அவர் கூறியதாவது, உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்களை உக்ரைன் இல்லாமல் இயற்றக்கூடாது. இதைத்தொடர்ந்து உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார். எனினும் ரஷ்யா தரப்பில் அத்தகைய தயார் நிலை இல்லை என்றும் உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.