
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை கட்டுப்படுத்த கேரளா அரசால் மாநிலம் முழுவதும் தனிப்படை ஒன்று அமைத்து போதைப்பொருள் தடுப்பு துறையினரால் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில், மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதே சிரஞ்சியை பயன்படுத்திய அவருடன் சேர்ந்த 9 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
‘கேரளாவில் மாதந்தோறும் சுமார் 130 பேருக்கு எச்.ஐ.வி. நோய் பதிவாகிறது. அதில் 18-25 வயதை சேர்ந்த இளைஞர்களே அதிகமாக உள்ளனர். கேரளா மாநிலத்தில் தற்போது 17,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்’ என்று கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்(KSACS) தெரிவித்துள்ளது.