தமிழகத்தை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனைவருக்கும்  சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் வரவேற்றுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தை காப்பாற்ற முயன்ற சார்கள் மானம் இருந்தால் வெட்கி தலை குனியட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் அதிமுக நிர்வாகியாக இருந்தவர். இந்த குற்றம் வெளியே தெரிந்த நிலையில் உடனடியாக அவரை கட்சியிலிருந்து அதிமுக நீக்கியது. இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நடந்தது.

இந்த சம்பவத்தில் ஒரு கல்லூரி மாணவி உட்பட ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது என்பதை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.