
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி நடத்தி வைத்த நிலையில் பின்னர் மணமக்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வேளாண்மை பட்ஜெட்டில் வெறும் பொய்யும் புரட்டும் தான் உள்ளதாக கூறுகிறார். விலாசம் இல்லாத மக்களின் ஆதரவு இல்லாத அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எதை எடுத்தாலும் அதற்கு குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தலைவர் என்றால் அது உண்மையில் அண்ணாமலை மட்டும்தான். மேலும் வேளாண்மை பட்ஜெட்டை உண்மையான விவசாய பெருமக்கள் வரவேற்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.