அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டசபை கூட்ட நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது நீங்கள் செங்கோட்டையனிடமே இந்த கேள்வியை கேளுங்கள் அவரே இதற்கு பதில் சொல்வார் என்றார். இது பற்றி செங்கோட்டையனிடம் கேட்ட போது தொகுதி பிரச்சனை தொடர்பாக மனு கொடுக்க சபாநாயகரை சந்தித்ததாகவும் என்னைப் போன்று வேறு சில அதிமுக எம்எல்ஏக்களும் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு என் பாதை தனி பாதை எனவும் சில வேடிக்கை மனிதர்களை போன்று நான் வீழ்ந்து விட மாட்டேன் எனவும் கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அதிமுக கட்சி என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக கூட்டத்திற்கு வரவில்லை. ஆகவே அவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. இதை நீங்கள் அவரிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். தொண்டர்கள் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோன்று அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கும்போது சில பூசல்கள் மற்றும் மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த மன வருத்தங்களாலும் வேறுபாடுகளாலும் போனவர்கள் இன்று எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை வந்தால் பொதுவெளிக்கு செல்லாமல் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வது இல்லையா அதே போன்று தான் இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதை விட்டுவிட்டு செங்கோட்டையன் இப்படி பொதுவெளியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகமான செயல் என்று கூறினார்.