
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது நிலையில் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதோடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அன்பரசன் என்பவர் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ஒரு முகநூல் பதிவுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் அன்பரசன் மீது விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவினை போலீஸ் சூப்பிரண்டுமதிவாணன் பிறப்பித்துள்ளார்.