கர்நாடக மாநிலம் தவனகிரே மாவட்டத்தில் உள்ள உச்சங்கிதுர்கா கோவிலுக்கு மார்ச் 31 அன்று தனது இரு குழந்தைகளுடன் வந்த விஜயநகரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், வழிபாட்டை முடித்துவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார்.

சக பயணிகள் இறங்கிய பிறகு பஸ்ஸை தனிமையான இடமாகிய சண்ணபுரா கிராமம் அருகே ஓட்டிச்சென்று, டிரைவர், கண்டக்டர் மற்றும் ஹெல்பர் ஆகிய மூன்று பெரும் குழந்தைகளின் வாயில் துணியை வைத்து, கைகளை கட்டியுள்ளனர். பின்னர் குழந்தைகள் முன்னிலையில் தாயை கற்பழித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்றதும் அருகில் இருந்த விவசாயிகள் மற்றும் வழிப்போக்கர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். மூன்று குற்றவாளிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் போலீசார் வழக்கை பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வெறும் காகிதத்தில் கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணின் கிழிந்த உடைகளுக்காக 2000 ரூபாய் பணத்தை கொடுத்து இந்த விஷயத்தை வெளியே கூற வேண்டாம் என மிரட்டி அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் அதே கோவிலில் கொண்டு விட்டனர்.

இதனை அறிந்த சில தலித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு விஜயநகரா மாவட்ட எஸ்.பி ஸ்ரீஹரி பாபுவிடம் அழைத்து சென்றனர். விஷயத்தை அறிந்த எஸ் பி அந்த பெண்ணையும் தலித் தலைவர்களையும் அரசிகேரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்.

அவர்கள் வந்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர். அதில் ஒருவர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.