
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பேயோட்டுதல் என்ற பெயரில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தாந்திரி ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மதேரா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது 25 வயதான அந்த கர்ப்பிணி பெண் உடல்நிலை சரியில்லாததால், அவரது மாமனார் பேய் பிடித்திருக்கலாம் என நம்பி, மதேரா கிராமத்தில் உள்ள தாந்திரி சிவசங்கர் சாவிடம் அழைத்துச் சென்றார். அவர் முதலில் மாமனாரை வெளியே உட்கார வைத்து, பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். உடல் நிலை மீண்டும் மோசமானபோது, மீண்டும் அந்தப் பெண்ணை தாந்திரியிடம் அழைத்து வந்தனர். அந்த முறைதான், மீண்டும் குற்றம் நிகழ்ந்தது. மூன்றாவது முறையில் கூட, அதேதான் நடந்தது. கடைசி முறையில், தாந்திரியின் மேலும் இரண்டு கூட்டாளிகளும் பெண்ணை கூட்டாக வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறை அந்தப் பெண்ணால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன் துயரத்தை தாயாரிடம் பகிர்ந்ததன் பின்னர், குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் சிவாய்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன், போலீசார் தாந்திரி சிவசங்கர் சாவை மத்தியப்பூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி மன்மோகன் குமார் கூறியதாவது, “செவ்வாய்க்கிழமை காலை அவர் வீட்டில் இருப்பது குறித்து தகவல் வந்தது. அதன்படி, சோதனையிட்டு கைது செய்தோம். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்” என்றார்.
இதற்கு முன்பும், குற்றம் சாட்டப்பட்ட தாந்திரி, பேயோட்டுதல் என்ற பெயரில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பயம் மற்றும் அவமானம் காரணமாக இதுபோன்ற குற்றங்களை வெளியிடாமல் இருந்ததால், அவரின் தைரியம் அதிகரித்திருக்கலாம் எனகூறப்படுகிறது.
தற்போது, போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தாந்திரியின் மற்ற இரு கூட்டாளிகளையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம், சமூகத்தில் இன்னும் நிலவிக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகள் எவ்வாறு பெண்கள் மீதான வன்கொடுமைகளாக மாறுகின்றன என்பதற்கான சாட்சி எனலாம். மேலும் அரசு, காவல்துறை மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதுபோன்ற கொடூர நிகழ்வுகளை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.