சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த பயங்கர ரயில் விபத்தில், இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது நபில் மற்றும் சபீர் அகமது, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

இன்று காலை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டபடியே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த நிலையில், நேருக்கு நேர் வந்த ரயிலில் அடிபட்டி உயிரிழந்துள்ளனர்.

சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயில், மாணவர்கள் இருவரையும் மோதி தூக்கி வீசியதால், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த இந்த சம்பவம், அவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.