மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூரைச் சேர்ந்தவர்கள், வன்னியர் சங்கம் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க வேன் ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் பயணித்த வேன், சீர்காழி அட்டகுளம் அருகே உள்ள புறவழிச்சாலையை இணைக்கும் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் விஜய், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்தபோது, வேனின் ஓட்டுநர் அருகிலிருந்த வேகத்தடையை தவிர்த்து எதிர்திசை சாலையில் வேகமாக திருப்பியதாகவும், ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் வேனில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாநாட்டு பயணத்தில் துயரமூட்டும் நிகழ்வாக மாறியுள்ளது.