
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுஷ்மா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையைப் பற்றி கூறிய சுஷ்மா, “இந்த குழந்தை மூன்றாவது பெண் குழந்தையாக இருப்பதால், பெற்றோர் வருத்தத்தில் இருந்தனர்” என கூறினார்.
View this post on Instagram
மேலும், பிரசவத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தை தாயை அழைக்காமல் விலகியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார். சுஷ்மாவின் இந்த உருக்கமான பதிவு இணையத்தில் வேகமாக பரவி, பலரது மனதையும் உருக்கியது.
இந்த வீடியோ மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சி, கோபம் மற்றும் ஆதரவை வெளிபடுத்தினர். “ஒரு பெண் குழந்தை பிறந்ததற்காக இவ்வளவு தவிர்ப்பா?” என்ற கேள்வி எழுந்தது.
View this post on Instagram
பலரும் அந்தக் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர். இது, இந்தியாவில் உள்ள ஆணாதிக்க மனப்போக்கையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தைப் பற்றிய புதிய சர்ச்சையை கிளப்பியது.
இதனை தொடர்ந்து டாக்டர் சுஷ்மா இரண்டாவது வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்தார். மக்கள் அளித்த உற்சாக ஆதரவை உணர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள், தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டதாகவும், தற்போது குழந்தையை அன்புடன் வளர்க்க வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஒரு குழந்தையை பெற எத்தனை பேர் ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்ததும், அந்த தந்தையும் உறவினர்களும் உருகிவிட்டார்கள்,” என்று சுஷ்மா கூறினார். சமூக ஊடகங்களின் நேர்மையான தாக்கம், ஒரு குழந்தையின் வாழ்க்கையை மாற்றிய உண்மை சம்பவமாக இது அமைந்துள்ளது.