
காலையில் எழுந்தவுடன் சூடா ஒரு கப் காபி குடித்தால் தான் தூக்கமே போகுது என்று பல பேர் சொல்வார்கள். அப்ப பிரஷ் பண்ணனும் இல்ல என கேட்டால் அது எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம் என்று அசால்டாக சொல்லுவார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் காபி குடிப்பது என்பது ஒரு பிரச்சனை என்றால் காபி குடித்த உடனே பல் துலக்குவதும் சில பிரச்சனைகளை உருவாக்கும். அது என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். காலையில் எழுந்த உடனே பல் தேய்க்காமல் காபி குடித்தால் இரவு முழுவதும் நம் வாயில் சேரும் கிருமிகள் நம் உடலுக்குள்ளே திரும்பி போய்விடும். இதனால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சனை வரலாம்.
அதேவேளை காபி குடித்து விட்டால் அரை மணி நேரம் இடைவேளை கழித்து பல் துலக்குவது தான் சரியான முறை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காபியில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமிலத்தன்மை பருக்களை தற்காலிகமாக வலுவிழக்க செய்திருக்கும். அந்த நேரத்தில் பற்பசையை போட்டு பல் துலக்கும் பொழுது பற்களில் உராய்வு ஏற்படும். இது மட்டுமில்லாமல் பற்களில் அரிப்பு, கூச்சம், சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அதே சமயம் காபி குடித்துவிட்டு அரை மணி நேரம் வெயிட் பண்ணும்போது வாயில் இருக்கும் உமிழ் நீரே காபி குடித்த பின் இருக்கும் அமிலத்தன்மையை சீர் செய்ய உதவுகிறது. அடுத்ததாக காபி குடிப்பதால் பற்களில் படியும் கரையை நீக்குவதற்கான சரியான டூத் பேஸ்ட்டை தேர்வு செய்வதும் அவசியம்.