ஹாலிவுட் நடிகரும், ‘பேட்மேன்’ மற்றும் ‘தி டோர்ஸ்’ போன்ற படங்களில் பிரபலமானவருமான வால் கில்மர், லாஸ் ஏஞ்சலஸில் செவ்வாய்க்கிழமை 65 வயதில் காலமானார். அவரது மகள் மெர்சிடீஸ் கில்மர், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த தகவலில், நிமோனியாவால் அவர் உயிரிழந்ததாகவும், 2014ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் கண்டறியப்பட்டு அதன் பின் குணமடைந்திருந்ததாகவும் தெரிவித்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு ‘டாப் சீக்ரெட்’ என்ற ஹாஸ்ய திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வால் கில்மர், ‘டாப் கன்’, ‘ரியல் ஜீனியஸ்’, ‘வில்லோ’, ‘ஹீட்’, ‘தி செயின்ட்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தொண்டை புற்றுநோயால் குரல் இழந்திருந்தாலும், 2021ஆம் ஆண்டு ‘டாப் கன்: மேவரிக்’ படத்தில் அவர் மீண்டும் நடித்தார். அந்நாண்டே அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘வால்’ என்ற ஆவணப்படமும் வெளியானது. இதில், அவரது மகன் ஜாக்க் கில்மர் அவருடைய பழைய ஒலிக் கோப்புகளை இணைத்து குரல் வழங்கியிருந்தார். மேலும் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.