தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் பாஜகவினர் மும்மொழி கல்வி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் என்பது நிலவுகிறது.

இந்த நிலையில் பாஜக கட்சியின் சார்பில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் பொதுமக்களிடம் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களிடம் பாஜகவினர் சிலர் பிஸ்கட் கொடுத்து கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது மும்மொழிகல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டாய கையெழுத்து வாங்குபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.