
திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் விடுமுறை என்பதால் தன் பெற்றோருடன் வந்து திருப்பூரில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இந்த மாணவி வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி அழுது கொண்டே இருந்த நிலையில் பெற்றோர் சமாதானம் செய்துவிட்டு துணைத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டிற்கு வந்தபோது சிறுமியை காணவில்லை. அவர்கள் தேடிப் பார்த்தபோது அருகில் உள்ள ஒரு கிணற்றின் ஓரம் சிறுமியின் செருப்பு கிடந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகப்பட்ட பெற்றோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக அங்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர்.
சுமார் 3 மணி நேரமாக நடந்த தேடுதலுக்குப் பிறகு மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. தங்களின் மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்த நிலையில் அங்கிருந்தவர்கள் மத்தியில் வேதனை ஏற்பட்டது. இது தொடர்பாக மங்களம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.