
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள துகோகஞ்ச் பகுதியில், 37 வயதான பாப்லு என்ற இளைஞர், தனது 4 வயது மகனை விஷம் கொடுத்து கொன்று, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்லுவின் மனைவி சோனாலி மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மேலும், சமீபத்தில் டாக்டர்கள், பாப்லுவுக்கு இரத்த புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாக கூறியதும், மனவேதனையில் இருந்தார்.
தனது இறப்புக்குப் பிறகு மகன் யாருடைய பாதுகாப்பிலும் இருக்க மாட்டான் என்ற எண்ணத்தில் பாப்லு இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று பாப்லுவின் பார்வையிழந்த தந்தை அருகிலேயே இருந்தும், இவர் இசை கேட்பதில் மூழ்கியிருந்ததால், நடப்பதை கவனிக்க முடியவில்லை.
பாப்லுவின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்த போது, பாப்லு தூக்கில் தொங்கியதும், அவரது மகன் ஹர்மன் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பாப்லு தற்கொலைக்குப் பிறகு எழுதிய கடிதத்தில், “எனக்கு பிளட் கன்சர் வந்துவிட்டது. என் மகனை யார் பார்த்துக் கொள்வது? அதனால்தான் அவனை என்கூட அழைத்துச் செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் கடந்த வாரம் தனது மகனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியிருந்தார். மேலும், தற்கொலைக்கு முன், மகனை பள்ளியில் சேர்க்க RTE படிவத்தை எடுத்துவர தனது சகோதரரைக் கூட அனுப்பியிருந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.