
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் என்றால் மீண்டும் பிரிவினைவாத குரல் எழுமென்று கூறியவர் அண்ணா. ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி உள்ள மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறியவர். ஆனால் அதை இன்று மோடி குழி தோண்டி புதைத்து விட்டார். அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார். நான் அண்ணாவின் படையில் 60 ஆண்டுகளாக இருந்த நிலையில் 30 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் 30 ஆண்டுகள் பொது வாழ்விலும் ஈடுபட்டுள்ளேன். சில துரோகிகள் இன்று அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். மூடநம்பிக்கைகளை ஒழிக்க தமிழ்நாட்டில் மட்டும் இன்றி கேரளாவிலும் போராடியவர் பெரியார்.
அப்படிப்பட்டவரை இன்று பேசும்போது ஒவ்வொரு வார்த்தையும் என் நெஞ்சில் ஈட்டி சொருகியது போல் இருக்கிறது. நான் நரேந்திர மோடியை தற்போது எச்சரிக்கிறேன். அண்ணா கல்லறையின் அருகே நின்று சொல்கிறேன். நெருப்போடு விளையாடுகிறீர்கள். ஒரே நாடு என்றால் இந்தி பேசும் நாடு மட்டும்தான் இருக்கும். நாங்கள் அனைவரும் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்பவர்கள் நாங்கள். தற்போது வந்த ஆபத்து ஜனநாயகத்திற்கு வந்த ஆபத்து. சமூக நீதிக்கு வந்துள்ள ஆபத்து. ஒருவர் அப்பட்டமான பொய்களை பேசி வருகிறார்.. மேலும் நான் பிரபாகரனுடன் இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிடும் காலம் விரைவில் வெளிவரும் என்று கூறினார்.