
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில் சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறியிருந்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜோ ரிச்சர்ட் என்ற 28 வயது வாலிபர் ஏஐ மூலமாக அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இவர் இருசக்கர வாகன ஓட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் அந்த பெண்ணை தினசரி வேலைக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஜோ அந்த பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்கவில்லை. இதனால் அந்த பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என முடிவு செய்த ஜோ ஏஐ மூலமாக அவரின் புகைப்படத்தை ஆபாசமான முறையில் சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியதோடு அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.