
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பென்ரோசு என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு, சிதைந்த நிலையில் 191 மனித உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டதும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில அறைகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு அழுகிய உடல் எச்சங்கள், துர்நாற்றம் மற்றும் பூச்சிகள் சூழ்ந்திருந்தது. இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி, ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ என்ற இறுதிச் சடங்கு நிறுவன உரிமையாளர் ஜான் ஹால்ஃபோர்ட். இவர் தனது மனைவி கேரி ஹால்ஃபோர்டுடன் இணைந்து 2019 முதல் 2023 வரை இறந்தவர்களின் உடல்களை முறையாக எரிக்காமல் பதுக்கி வைத்துள்ளார்.
மேலும், உறவினர்களுக்கு போலியான சாம்பல் கலசங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் தவறான உடல்கள் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் நீதிமன்ற ஆவணங்களில் உள்ளது. ஹால்ஃபோர்ட் இந்த செயல்களுக்காக மாநில நீதிமன்றத்தில் 191 உடல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும், ஹால்ஃபோர்டு அமெரிக்க அரசு வழங்கிய COVID-19 நிவாரண நிதியாக 9 லட்சம் அமெரிக்க டாலர்கள் (₹7.5 கோடிக்கு மேல்) பெற்றும், அதை தனது சொந்த தேவைக்காக மோசடி செய்துள்ளார்.
அந்த தொகையில், ₹1 கோடிக்கு மேல் மதிப்புள்ள எஸ்யூவிக்கள், ₹25 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி மற்றும் Gucci, Tiffany & Co போன்ற பிரபல ஆடம்பர கடைகளில் பொருட்கள் வாங்கியுள்ளார். இவர் வாடிக்கையாளர்களிடமிருந்தும் ₹1.1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விவரங்களையும் எடுத்துரைத்த அமெரிக்க நீதிபதி நினா வாங், இது சாதாரண மோசடி வழக்கு அல்ல என்றும், பல குடும்பங்களுக்கு உணர்ச்சி ரீதியாக பேரழிவை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு, ஜான் ஹால்ஃபோர்டுக்கு (20 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
கூடுதலாக, அவர் $10,70,413 (₹9 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி கேரி ஹால்ஃபோர்ட் மீது இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கி, நம்பிக்கையை துரோகப்படுத்தும் மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம் கிளம்பியுள்ளது