
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே பரியாட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனதை பதறவைக்கும் மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்வையற்ற 16 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது. மிகச் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததோடு அவர் நேரடியாக ஆதரவளித்ததாகவும், மகள் கர்ப்பமானபோது, அவளுக்கே தெரியாமல் கருக்கலைப்பு செய்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடல்நிலை மற்றும் மனநிலை மோசமடைய, ஒரு தருணத்தில் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அக்கம்பக்கத்தவரிடம் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பக்கத்து வீட்டினர் பரிதாபத்துடன் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் குழந்தையை தனிமைப்படுத்தி விசாரணை மேற்கொண்டபோது, சம்பவத்தின் முழு உண்மை வெளிவந்தது. அதன்பிறகு, சிறுமியின் தந்தை மற்றும் ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு சகோதரர் வேறு மாநிலத்தில் வேலை பார்த்துவருவதால், அவரை கைது செய்ய தனிப்படை உருவாக்கி தேடுதல் நடக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல்துறையின் மனிதாபிமான அணுகுமுறையால், சிறுமி தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தாயாரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுமியின் மருத்துவப் பதிவுகள் மற்றும் கருக்கலைப்பின் காலக்கெடுவும் தற்போது நீதிமன்றம் முன் எடுத்துச் செல்லப்பட உள்ளன.
இந்த கொடூரச் சம்பவம், சமூகத்தில் பெற்றோர் பாதுகாப்பான தலமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையையே சாய்த்துவிட்டது. சம்பவம் குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், திரும்பதிரும்ப நினைத்துப் பார்ப்பதற்கே மனம் கொதிக்கும் அளவுக்கு இந்த சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. மேலும் வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்படுவதுடன், சிறுமிக்கான நீதி உறுதி செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.