
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலேதிஹா கிராமத்தில், ஒரு பெரிய மலைப்பாம்பு நரியை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் நேரில் பார்த்த இந்த அபூர்வமான சம்பவம், தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நரியை முழுவதுமாக விழுங்கும் அந்த மலைப்பாம்பின் செயல், வன உயிரினங்களின் உணவுப் பழக்கங்களை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.
View this post on Instagram
பலேதிஹா கிராமத்தில் உள்ள சில கிராமவாசிகள் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, காட்டில் ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரு நரியை பிடித்து விழுங்க முயற்சிப்பதைக் கண்டுள்ளனர். உடனே அவர்கள் அருகில் சென்று சத்தம் போட்டுள்ளனர். ஆனால் அந்த மலைப்பாம்பு தனது வேட்டையை நிறுத்தாமல் நரியை விழுங்க ஆரம்பித்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது @BrutIndia என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், மலைப்பாம்பு நரியின் தலைப்பகுதியை முழுவதுமாக விழுங்கிவிட்டு, அதன் பின்புறத்தை விழுங்க முயற்சிப்பது தெளிவாக காணப்படுகிறது. அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் தங்கள் மொபைல்களில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து இணையவாசிகள் பலர் நகைச்சுவையாகவும், அதிசயமாகவும் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், “அதை நிம்மதியாக சாப்பிட விடுங்கள்” என பதிவிட்டிருக்கிறார். மற்றொருவர், “இது திருமணத்தில் சாப்பிடும் போது கேமராமேன் வீடியோ எடுப்பது மாதிரியே இருக்கிறது” என கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.