மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் அரசாங்கத்தையே மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தரம் சச்சின் சகாயக் என்பவர் கியோலாரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு மோசடி மன்னன்.

இவர் மின்னல் தாக்கிய உயிர் இழந்தவர்கள், பாம்பு கடித்து இறந்தவர்கள் மற்றும் நீரில் மூழ்கி இறந்தவர்கள் என போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அரசிடம் கொடுத்துள்ளார். அதன் மூலம் அரசு நிதி உதவித்தொகை 11.21 கோடியை மோசடி செய்துள்ளார்.

இந்த பணத்தை தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வங்கி கணக்கிற்கு அவர் மாற்றிய நிலையில் இந்த மோசடி கடந்த 2018-19, 2021-2022 ஆகிய காலகட்டங்களில் நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் இறந்ததாக கூறிய ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு ரகுமான் என்பவர் பாம்பு கடித்ததில் 28 முறை இறந்ததாக அவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். இதேபோன்று மின்னல் தாக்கி பலியானவர்கள் மற்றும் நீரில் மூழ்கி பலியானவர்கள் என கணக்கு காட்டியும் அவர் பணம் பெற்றுள்ளார்.

இந்த மாநிலத்தில் இயற்கை பேரிடர் மரணங்களுக்கு 4 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் நிலையில் அதற்காகத்தான் அவர் இது போன்ற மோசடி செய்து பணம் அபகரித்தது தெரியவந்தது. இதற்கு சில அதிகாரிகளுமம் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 47 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.