பெங்களூருவில் உள்ள சைடேஹள்ளி பகுதியில் கடந்த மே 19-ஆம் தேதி, ஒரு கணவன் தனது மனைவியின் மீது கழிப்பறையில் பயன்படுத்தப்படும் ஆசிட் கலந்த திரவத்தை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்.எம்.எச். லேஅவுட் பகுதியில் 44 வயதான பெண், ஒரு பியூட்டிஷியனாக பணிபுரிந்து வருகிறார். அன்று இரவு 9 மணியளவில் அவரது கணவர் மது வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். மனைவி மறுத்ததும், அவரை துன்புறுத்தியுள்ளார்.

பின்னர் வெளியில் சென்று மது குடித்துவிட்டு, வீடு திரும்பிய கணவர், தனது மொபைலில் சத்தமாக பாடல் வைக்கத் தொடங்கியுள்ளார். மனைவி சத்தம் குறைக்க கேட்டதையடுத்து, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கணவன், கழிப்பறையில் இருந்த ஆசிட் கலந்த திரவத்தை எடுத்து வந்து, மனைவியின் முகம் மற்றும் தலை மீது ஊற்றியுள்ளார்.

மனைவி கூச்சலிட்டதும் அவர் தப்பியோடியதாக போலீசார் கூறுகின்றனர். காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு  உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணின் கணவரை தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.