தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுகப் பாடல், ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

4.47 நிமிடங்கள் கொண்ட இந்த பாடல், “தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது… மூன்றெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது…” என்ற வீரியமான வரிகளுடன் ஆரம்பமாகிறது. கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பிரதானமாக ஒலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூலை 7-ஆம் தேதி தொடங்க உள்ள “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்ட புதிய பிரசாரப் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 3.50 நிமிடங்கள் கொண்ட இந்தப் பாடல், “சரித்திர நாயகன்… சாமானிய நாயகன்… தமிழக தாயை மீட்க உறுதி கொண்ட ஒரு மகன்…” எனும் வரிகளுடன் துவங்குகிறது.

ஆனால், இந்த பாடலின் தொடக்க இசையும், விஜய் கட்சியின் கொடி அறிமுகப் பாடலின் ஆரம்ப இசையும் ஒத்துப்போவதாக, சமூக வலைதளங்களில் தொண்டர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சியின் ரசிகர்கள், “விஜய் பாடலின் இசையை அடிப்படையாக எடுத்துத் தனிக்குரிய சுய அடையாளமின்றி அதிமுக காப்பி அடித்துவிட்டது” என குற்றம் சாட்ட, இது அரசியல் பரப்புரைப் பாடல்களில் உருவான புதிய சர்ச்சையாக காணப்படுகிறது.

இரு பாடல்களுக்குமான ஒத்திசைவு குறித்து இசையமைப்பாளர்கள், கட்சி தரப்புகள் எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், பிரசார இசைச் சாயல்கள் தொடர்பாகத் தொடரும் இந்த விவாதம், சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.