
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறி வைத்து அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்ததோடு அவர்களின் தாக்குதல்களை வான்வெளியில் முறியடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதனை மத்திய அரசு உறுதிப்படுத்திய போதிலும் போர் நின்றாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், அட்டாரி வாகா எல்லை மூடல், விசா நிறுத்தம் போன்றவைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ராணுவத்திற்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.