
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை ஜெர்மனி அரசு கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த கருத்தை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனிருந்தார். ஜெர்மன் அமைச்சர் கூறுகையில், “இரு தரப்பும் (இந்தியா-பாகிஸ்தான்) சமீபத்தில் சந்தித்த இராணுவ மோதல்களின் பின்னணியில், பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைக் காக்க இந்தியாவுக்கு முழுமையான உரிமை உண்டு.
தற்போது போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்தார். பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களை இருதரப்பு உரையாடலின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ஜெய்சங்கர் தனது பதிலில், “இந்தியா பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடம் தராது. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கும் பயங்கரவாதத்துக்கும் நாங்கள் ஒரு போதும் அடிபணிய மாட்டோம். எந்தவொரு குழப்பமும் இல்லாமல், பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு அடிப்படையிலான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடும்” என திடமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஜெர்மனி புரிந்து கொண்டதையும், அவர்களின் ஆதரவை இந்தியா மதிக்கிறதையும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.