
பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு ஆய்வு மையமான NCS வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது நிலநடுக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 30 ஆம் தேதி, பாகிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 31.08° வடக்கு அட்சரேகை மற்றும் 68.84° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாகவும், அதன் ஆழம் 50 கிலோமீட்டரானது என்றும் கூறப்பட்டது. அதற்கு முன் ஏப்ரல் 12 ஆம் தேதி 5.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் புவியியல் ரீதியாக மிகவும் அதிர்வுகள் நிகழக்கூடிய பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் பதிவாகின்றன. இந்திய மற்றும் யூரேசிய பிளேட்கள் சந்திக்கும் பகுதிகளில் உள்ள பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் ஆகிய மாகாணங்களில் பூகம்பங்கள் அதிகம் ஏற்படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் கவலை நிலவுகிறது.