பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் வியாழக்கிழமை காலை வால்டன் சாலையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோபால் நகர், நசீராபாத் மற்றும் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இந்த வெடிசத்தங்கள் பதிவாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், புகை மூட்டத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியே ஓடும் காட்சிகள் காணப்படுகின்றன. இவை நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடிச்சத்தங்களுக்கு காரணம் இந்திய ட்ரோன் தாக்குதலாக இருக்கலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறப்பட்டாலும், இதுகுறித்து எந்த உறுதி செய்யப்பட்ட தகவலும் இந்திய அரசிடம் இருந்து வெளியாகவில்லை. மேலும், ட்ரோன் தாக்குதல் தொடர்பான தகவல்களும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, லாகூர் மற்றும் சியால்கோட் பகுதிகளில் உள்ள விமான வழித்தடங்கள் வணிக விமான தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதிய அறிவிப்பின் அடிப்படையில், இந்த முடக்கம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனமான PIA-வின் பல விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மதீனாவிலிருந்து லாகூருக்குச் செல்லவிருந்த விமானம் மற்றும் முல்தானிலிருந்து லாகூருக்கு கிளம்பவிருந்த தனி விமானம் ஆகிய இரண்டும் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.