ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் வகையில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் எதிர்வினை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் நேரத்தில், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ராவல்பிண்டியில் நடந்த ட்ரோன் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகிலும், லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகிலும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி பகுதியில் உள்ள கோபால் நகர், நசீராபாத் உள்ளிட்ட இடங்களில் வெடி சத்தம் மற்றும் புகைமூட்டம் ஏற்படுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. இதில், அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கான காரணம், குறிக்கோள் ஆகியவை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடலுக்கு அருகிலிருந்த கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், அந்தப் பகுதியில் கடும் போலீஸ் கண்காணிப்பு அமையப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ட்ரோன் தாக்குதலுக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், இன்று இரவு நடைபெற இருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி – பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் லாகூர் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வீரர்களை அவசரமாக பாதுகாப்புடன் வெளியேற்றும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச ரீதியிலான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.