தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்து விழுந்து விடுவார். இதனால் அதற்காக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிறுமி பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி இறந்து விட்டார். மேலும் இது தொடர்பாக சுரண்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.