திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கணினி பொருட்களை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோல இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியர் அறை, அதிநவீன வகுப்பறையிலிருந்து கணினி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வம்(35) என்பவர் இரண்டு பள்ளிகளிலும் திருடி சென்றது தெரியவந்தது.

அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து 2 கணினி, 4 மாடி கணினி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.