
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த போது குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரகுபதி தனது மனைவியை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவ வலி வந்ததால் கோகுலப்பிரியாவை மாப்பிள்ளையூரணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோதனை செய்து பார்த்தபோது குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.
உடனே மகப்பேறு மருத்துவப் பிரிவில் கோகுல பிரியாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் உரிய சிகிச்சை அளிக்காமல் 24 மணி நேரமாக இறந்த குழந்தையை சுமந்தபடி கோகுலப்பிரியா அவதிப்பட்டு உள்ளார். இது குறித்து ரகுபதி உள்ளிட்ட சிலர் மகப்பேறு பிரிவில் இருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது குழந்தை தானாக வெளியே வரும் என அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது.
சுமார் 24 மணி நேரம் கோகுலப்பிரியா இறந்த குழந்தையுடன் இருந்ததால் ரகுபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மகப்பேறு மருத்துவரிடம் விசாரிக்க சென்றனர்.
அப்போது மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கூறியதாவது, இறந்த குழந்தையை உடனே வெளியே எடுக்க முடியாது. அதற்காக மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய வலி வந்த பின்பு தான் குழந்தையை எடுக்க முடியும். நாங்கள் உள்ளே கூப்பிட்டால் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என கூறியுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.