
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், சமீபமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்திருந்த அபிநயா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் பணியில் இருந்த போதே அபிநயா துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அருகில் இருந்த பெண் காவலர் ஓடி வந்து பார்த்தபோது, அபிநயா ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆயுதப்படை டிஎஸ்பி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.