குருகிராமில் உள்ள ட்வார்கா எக்ஸ்பிரஸ் வீதியில் ஒரு பெரிய விளம்பர பேனர் காரின் மீது விழுந்தது. அந்த காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். பேனரின் கீழ் சிக்கிக்கொண்ட காரில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ட்வார்கா எக்ஸ்பிரஸ் வீதியில் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

இந்த சம்பவம் நேற்று மலை 6:30 மணியளவில் பலத்த காற்று வீசியதால் நடந்துள்ளது. இந்த புயலால் ட்வார்கா எக்ஸ்பிரஸ்வே, NH-48, சதர்ன் பெரிபெரல் ரோடு, சோஹ்னா ரோடு எலிவேட்டட் ஹைவே மற்றும் குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ்வே உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

மேலும் குருகிராமில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதோடு பல பகுதிகளில்மின் கம்பம் சரிந்து விழுந்ததால்  மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கூறியதாவது, “வாகனம் மீது விழுந்தது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அவசர நடவடிக்கை எடுத்து விளம்பர பேனரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்து மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வந்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.