
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள சஹ்ஜன்வா ரயில்வே நிலையம் அருகே உள்ள கேசவ்பூர் துணை மின் நிலையத்தின் கம்பியில், சுமார் 20 அடி உயரத்தில் மனித கரு தொங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த திடுக்கிடும் காட்சியை பார்த்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மின் கம்பியில் சிக்கிய சிசுவின் சடலத்தை பாதுகாப்பாக கீழே இறக்கி, உடற்கூறியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கோரக்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: “நாங்கள் அருகிலுள்ள வீடுகளில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகிறோம். அருகிலுள்ள ரயில்வே கட்டிடத்திலிருந்து இந்த கரு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
உயிரிழந்த சிசு பிறந்து சில மணி நேரங்களிலேயே கைவிடப்பட்டதா, அல்லது பிறக்கும் முன்பே கருக்கலைப்பு செய்யப்பட்டதா என்பதற்கான தகவல்கள் தற்போது உறுதி செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.