உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள “ஸ்ரீ சிதேஸ்வர்நாத் மகாதேவ்” கோவிலில் நடந்த விசித்திரமான திருட்டு சம்பவம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில், ஒரு நபர் அகர்பத்தி ஏற்றும் நடிப்பில் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சேஷநாக சிலையை திருடிச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

சம்பவம் நடந்த இடம் கட்டரா கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணேஷ்கஞ்ச் மொஹல்லா பகுதியில் அமைந்துள்ள கோவில். குறித்த நபர், கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, மிகவும் திட்டமிட்டு சிலையை ஒரு பையில் வைத்து அங்கிருந்து நடந்து சென்றுள்ளார்.

இந்த சேஷநாக சிலை சிவபெருமானின் பின்புறம் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்த ஒரு முக்கியமான புனிதச் சின்னமாக இருந்தது. வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதும், மிர்சாபூர் மாவட்ட காவல் துறை செயல்பாட்டுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

இதையடுத்து, கட்டரா கோத்வாலி காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருடனை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் கவனம் செலுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.