தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது  நண்பரை அழைத்துக் கொண்டு ஜவகர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வீட்டினுள் இருந்த ஜவகரை வெளியே வரவழைத்து அவரிடம் அவதூறாக பேசி சண்டை போட்டுள்ளார். இதனால் ஜவகருக்கும், ஜெகதீஷ்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சண்டை முற்றியது.

இதனால் கோபமடைந்த ஜவகர் ஜெகதீஷை அரிவாளால் வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெகதீஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஜெகதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜவகரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.