உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட இந்திய விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படையின் தலைமை பொறியாளர் எஸ்.என். மிஸ்ரா (வயது 50) மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்ரா, மைய விமான கட்டுப்பாட்டு தளமான பம்ரௌலி விமானப்படை தளத்தில் தலைமை பணியாளராக இருந்தார். இன்று அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மிஸ்ராவை, ஜன்னல் வழியாக  மர்ம நபர் அழைத்தார். இதனால் மிஸ்ரா ஜன்னலை திறந்தார். உடனே மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த மிஸ்ராவை அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவம் குறித்து இந்திய விமானப்படை மற்றும் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.