
கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை படித்த இளம்பெண், அதே காலகட்டத்தில் கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்ற மாணவருடன் பழகினார். அவர் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், 2018-ஆம் ஆண்டு முகமது வேலைக்காக துபாய்க்குச் சென்றுள்ளார். இந்நிலையில், முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அறிந்த இளம்பெண், முகமது தாயிடம் கேட்டபோது, திருமணத்திற்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும், முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், குர்ஆன் படிக்கச் சொல்லி நோன்பு இருக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் 2020-ஆம் ஆண்டு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுக்கு எதிராக “லுக் அவுட் நோட்டீஸ்” பிறப்பித்தனர். முகமது துபாயில் இருப்பதால், அவரை இந்தியா வரவழைத்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, முகமது துபாயிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது, வடபழனி போலீசார் அவரை கைது செய்தனர். முதலில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் முகமதுவை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.